நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் உயர்தர பரீட்சை ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, October 12th, 2020

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றியவாறு பரீட்சைகள் இடம்பெறுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் 12 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 454 பரீட்சார்த்திகள் அந்த நிலையங்களில் பரீட்சைக்காக தோற்றுகின்றனர்.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: