நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டுச் சிறைப்படுத்தியது – மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிள்ளையான்!

Thursday, August 20th, 2020

கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது. ஐந்து வருடங்கள் நான் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை அவர்களுக்குச் சேவை செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அவா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாடாளுமன்ற அமர்வில் வந்து நான் கலந்து கொள்வதற்கும் பல தடங்கல்களும் தாமதங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டும். இப்படி ஒரு சூழலில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.

எங்களுடைய நாட்டில் சமூக முரண்பாடுகள் நடந்து முடிந்திருக்கின்றது. நாம் இந்த சமூக முரண்பாடு, ஆயுத பேராட்டங்கள் காரணமாக 16 வயதிலே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியவன்.

ஆனால் அந்த அமைப்பின் நோக்கங்கள் கொள்கைகள் பிழைத்ததன் காரணமாக அதிலிருந்து விலகி ஜனநாயக ரீதியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆரம்பித்து இன்று பல விடயங்களை செய்திருக்கின்றோம்.

இந்த நிலையில் இப்போது வட பகுதி மக்களும் தென்பகுதி மக்களும் இணைந்து பலமா ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து  பிள்ளையான் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

இதனையடுத்து, இன்று இடம்பெற்ற 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்ற பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மேலும் தான் 5 வருடங்கள் சிறை வாசம் அனுபவிப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார். தான் சிறையில் உள்ளமையினால் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவும் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: