இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டும் – உலக வங்கி மதிப்பீடு!

Wednesday, April 3rd, 2024

இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்த வருடம் 2.2 சதவீதம் என்ற மிதமான வளர்ச்சியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார அபிவிருத்தி தரவுகளின் படி, பொருளாதாரம் மீட்சி அடைந்துவருவதுடன், பணவீக்கமும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

புதிய நிதி கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னணியில் அதிக வருமானம் பெறும் வழிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதன்காரணமாக நடைமுறை கணக்கானது ஐந்தாவது வருடமாகவும் உபரியை பதிவுசெய்துள்ளது. அத்துடன் அந்நிய செலாவணியும் அதிகரித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரம் வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் பாதையின் தொடர்ச்சியுடன், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மிகவும் அவசியம் என மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் ஹடாட் சேர்வோஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கை இரண்டு மூலோபாயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் சீர்திருத்தங்களை சீராக பராமரிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்புக்கு முக்கியமான தனியார் முதலீடுகளையும் மூலதன உட்பாய்சல்களையும் தூண்டுவதற்கான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2025 ஆம் ஆண்டு பணவீக்கம் படிப்படியாக குறைவடைந்து, பொருளாதாரம் 2.5 சதவீதமாக வளர்ச்சியடையும் எனவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிக கடன் சுமை காரணமாக இலங்கையின் நிதி நிலுவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டில் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் பிராந்தியமாக தெற்காசியா தொடர்ந்தும் காணப்படும் என மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் ஹடாட் சேர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியால் இலங்கையும், பாகிஸ்தானும் பொருளாதார ரீதியாக உந்தப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: