நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர் ஹெகலிய அறிவிப்பு!

Friday, July 21st, 2023

நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்ப முன்னர் அந்த கேள்விகளை உரிய அமைச்சருக்கு அறிவிக்கும் வழக்கம் நாடாளுமன்றத்தில் உள்ளது.

தற்போது அந்த வழக்கத்தை ஒருசிலர் பின்பற்றுகிறார்களா என்பதை அறிய முடியவில்லை. நான் சபையில் இல்லாத போது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறை தொடர்பில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் சகல கேள்விகளுக்கும் அறிவியல் ரீதியில் வெகுவிரைவில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன்.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி இல்லாத காரணத்தால் சிசேரியன் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பில் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளக அறிவிப்பு ஊடாக மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இரு வாரங்களுக்கு பின்னர் பிரச்சினைகள் தீவிரமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, களுத்துறை வைத்தியசாலைக்கு 50 எவிமாகென் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30,000 தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, ஒரு அறிவித்தல்களையும், அதனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுவது கவலைக்குரியது.

இலவச சுகாதாரத்துறை சேவைக்கு எதிராக திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

மருந்து தட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

திருட்டு பொருட்கள் கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட நபர் நான் அல்ல, ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வாருங்கள் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: