ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை !

Wednesday, February 14th, 2024

இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 150000 இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படும் என கடந்த ஆண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவ படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு படைத்தரப்பு குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் தொழில்நுட்ப ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் சமநிலையான பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை 35000 ஆக குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் இராணுவத்தின் எண்ணிக்கை 35000னால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமானப்படையினர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக  விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் தொடர்ச்சியாக கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெறும் போது படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

எனினும் படையினரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு ஏனைய நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: