ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதற்கு நடவடிக்கை – ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம்!

Friday, October 9th, 2020

ஓய்வூதிய நடைமுறையிலான பலன்களை நாட்டில் உள்ள உழைக்கும் அனைத்து மக்களுக்கும் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பளர் நாயகம் கே.ஆர்.பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய ஓய்வூதிய தினத்தில் அனைத்து உழைக்கும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களது பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி திருத்த சட்டமூலமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுதுள்ள கொவிட் – 19 நெருக்கடி நிலைக்கு மத்தியில் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கலந்துரையாடுவதற்கு வாய்பில்லை. இதனால் இது தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஓய்வூதிய திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்திற்கமைவாக அரச மற்றும் தனியார் துறையில் உள்ள ஓய்வூதியம் பெறும் வயதை நீடிப்பதற்கும் தனியார் துறைக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், அரச சேவை ஓய்வூதிய முறையை பாதுகாப்பதற்கும், ஓய்வூதிய முறைக்கு உட்படாத அனைவருக்கும் ஓய்வூதிய பயன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இணையத்தளத்தின் samatawishrama@pensions.gov.lk முகவரியூடாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும்.

Related posts: