தோழர் ஐயாத்துரை என்ற சிறந்த புரட்சியாளனை வலி.வடக்கு இழந்த தவிக்கின்றது – அஞ்சலி உரையில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Monday, January 27th, 2020

தன் வாழ்நாள் பூராகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது விடிவுக்காக ஓய்வின்றி உழைத்து மக்களுக்காக வாழ்ந்த தோழர் ஐயாத்துரை என்ற ஒரு ஒப்பற்ற புரட்சியாளனை இன்று வலிகாமம் வடக்கு பிரதேசம் இழந்து தவிக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான அமரர் ஐயாத்துரை அவர்களும் அவரது பாரியார் சரஷ்வதி அவர்களும் கடந்த 26.01.2020 அன்று காலமாகினர். இவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு அன்னாரது தெல்லிப்பளையில் உள்ள இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அஞ்சலி உரையில் அவர் மேலும் கூறுகையில் –

இளமைக்காலத்திலேயே சமத்துவ நோக்கம் கொண்டதான சமுதாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று இடதுசாரி கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது  மட்டுமல்லாது சமூக விடுதலைக்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் சிவதாசன் மற்றும் தோழர் கதிரவேலு ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர். சாதாரண மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்காக எந்த மட்டத்திற்கும் சென்று போராடி வெற்றி கண்டவர் தோழர் ஐயாத்துரை.

அகதி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி தேவை, சொந்த மண்ணில் மீள்குடியேற் வேண்டும் இந்த எண்ணச் செயற்பாட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலிகாமம் வடக்கு பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கட்சியுடன் இணைந்து அயராது உழைத்த ஒரு வெற்றிகண்டவர்.

குறிப்பாக நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தத்தால் வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு திசைகளில் அகதியாக வாழ்ந்துவந்த நேரத்தில்  இப்பகுதியின் மீள் குடியேற்றம் செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்ட போது அதற்காக தன்னை முழுமையாக அற்பணித்து செயலுருவம் கொடுத்தது மட்டுமல்லாது நிலமில்லாத மக்களுக்கும் நிலங்களை பெற்றுக்கொடுத்து வீட்டுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க பக்கபலமாக இருந்து உழைத்த ஒரு தேசப்பற்றாளர் தோழர் ஐயாத்துரை.

எமது கட்சியின் இணக்க அரசியலுக்கு மட்டுமல்லாது உழைக்கும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை இலட்சியமாக கொண்டு உழைத்த ஒரு சமூகப்பற்றாளன் இன்று நித்திய உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

தோழர் ஐயாத்துரை முன்னெடுத்துச் சென்ற பெரும் பணியில் அவருக்கு உத்வேகம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது அரசியல் பயணங்களுக்கும் சமூக சேவைகளுக்கும் அவரது துணைவியார் இலட்சுமி அம்மையாரும் பக்கபலமாக இருந்து செயற்பட்டிருக்கின்றார் என்பது வரலாறாகும்.

அந்தவகையில் அரசியலிலும் குடும்ப வாழ்விலும் இணைபிரியாத தம்பதியார்களாக இருந்தவர்கள் மரணத்திலும் அதனை நிரூபித்துள்ளார்கள்.

தன் வாழ்நாள் பூராகவும் மக்கள் தொடர்பாக சிந்தித்து மக்களுக்காக வாழ்ந்த தோழர் ஐயாத்துரையை என்ற சிறந்த ஒரு புரட்சியாளனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இப்பிரதேசமும் இன்று இழந்து நிற்கின்றது.

அவருக்கு எமது இறுதி அஞ்சலி மரியாதைகளை செலுத்துவதுடன் அன்னாரது பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து மரணத்தின் பின்னரும் அவரது நோக்கங்களை முன்னெடுத்து செல்வோம் என உறுதிகொள்வோம் என மேலும் தெரிவித்தார்.

Related posts:


வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமானது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தா...
சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட...