தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் – – தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உறுதி!

Tuesday, March 16th, 2021

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்கக்கோரி பெருந்தோட்ட கம்பனிகள் செய்துள்ள வழக்கில் தோல்வியுற்றால் அது குறித்து  நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து நிறைவேற்றி ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்பதாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபை வலியுறுத்தியதற்கு அமைய கடந்த 9 ஆம் திகதி இரவு தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் கையொப்பத்தில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இதற்கான எந்தவித மறுப்பையும் பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்காத போதிலும் தற்போது வர்த்தமானி அறிவிப்பை நீக்கக்கோரி 20 பெருந்தோட்ட கம்பனிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் நிலைமை தமக்கு தெளிவாக விளங்கினாலும் கூட தற்போதுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள், தேயிலைக்கான விலை குறைவு போன்ற காரணிகளினால் எம்மால் தற்போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கவனம் செலுத்த முடியாது என்றும் எனவே அதற்கான மாற்று நடவடிக்கை ஒன்றினை கையாளும் வரையில் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆயிரம் ரூபா வழங்க முடியாதென பெருந்தோட்ட கம்பனிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளின் இந்த செயற்பாடு குறித்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவிடம் கூறுகையில் – சற்றும் எதிர்பாராத விதமாக பெருந்தோட்ட கம்பனிகள் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளன.

நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் கூட, சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டும் கூட இப்போது கம்பனிகள் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எவ்வாறு இருப்பினும் பெருந்தோட்ட கம்பனிகள் தொடுத்துள்ள வழக்கை வெற்றிகொள்ள அரசாங்கம் முயற்சிக்கும்.

அவ்வாறு ஏலாது போனால் அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றினை கொண்டுவந்து ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை நாளாந்த சம்பளமாக வழங்கக்கோரி சட்டத்தை நிறைவேற்றி பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


6 ஆம் தரத்தில் மாணவர்களை, புதிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடா...
பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - அமைச்...
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம் - அடுத்த மூன்று ஆண்ட...