தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு முதலிடம் வழங்க இந்தியா முன்வர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 10th, 2016

இந்திய அரசானது முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 300 மில்லியன் ரூபா செலவில் பாரிய தொழிற் பயிற்சிமையமொன்றை அமைக்க முன்வந்துள்ளமை பெரிதும் வரவேற்பிற்குரியதொரு விடயமெனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய அரசின் இவ்வாறான உதவிகள் எமது மக்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் இத்தகைய தொழிற் பயிற்சிமையத்தை அமைத்துத் தரும் இந்திய அரசு எமது தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகள் வழங்கமுன்வந்துள்ளதாகவும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் திரு. ஆ. நடராஜன் அவர்கள் கூறியிருப்பதுமிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது எமது மக்களின் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும்என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரம் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் எமது முன்னாள் போராளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மேற்படி திட்டத்தின்போதுஅவர்களுக்கு முதலிடம் வழங்க நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை அவதானத்தில் கொண்டும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

இதனிடையே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்திய அரசினூடாக கடந்த காலங்களில் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக கிடைக்கப்பெற்ற பல்வேறு வகையான உதவிகளுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் எமது மக்களின் சார்பில் நான் இந்திய அரசுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டள்ளேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Related posts: