தொழிற் சங்க நடவடிக்கைக்கு மத்தியில் வழக்கமான செயற்பாடுகள் முன்னெடுப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

தொழிற் சங்க நடவடிக்கைக்கு மத்தியில் வழக்கமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
அந்த வகையில், வழக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சியம் முனைய (CPC/CPSTL) தலைவர் எம்.யூ. மொஹமட் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லையெனவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் மின்சார சபை காசாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபை பொது முகாமையாளரிடம் இதனை அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று இன்று (15) மக்கள் வங்கியின் 352 கிளைகளில் 330 கிளைகள் முழுமையாக செயற்படுவதாகவும், மு.ப. 10.30 மணி வரை 75% இற்கும் அதிக பணியாளர் வருகை பதிவாகியுள்ளதாகவும், மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் பொது முகாமையாளருமான க்ளைவ் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களுக்கு சேவை வழங்கும் வகையில், தலைமை அலுவலகம் உள்ளிட்ட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக, இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்கா அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 107 இ.போச. டிப்போக்களும் இன்று காலை 11.00 மணி வரையான நிலவரப் படி வழமையான நேர அட்டவணையின்படி இயங்குவதாகவும், 8 தொழிற் சங்கங்களில் ஜே.வி.பி. தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய 7 தொழிற்சங்கங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் புகையிரத ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8.00 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|