தொடருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு: அரச பேருந்துகள் சேவையில்!

Friday, June 21st, 2019

தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் நேற்று நள்ளிரவுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேதனப்பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதன் அடிப்படையில் நிதி அமைச்சு செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நிதி அமைச்சருடன், தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் நிறைவடைந்தது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் 2 தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் நேற்று இரவு 7.00 மணி அளவிலேயே பல தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் இருந்த பயணிகள் அதிருப்தியை வெளியிட்டதுடன், அங்கு பதட்டமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, தொடருந்து தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காலத்தில், பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவை வசதிகளை வழங்குவதற்காக மேலதிக அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக அரச பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts: