கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, November 25th, 2021

 “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்துக்குள் செய்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி தெரிவித்துள்ளார்

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்துக் கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து, அவற்றை பிரதான வீதிக் கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்” என்ற தலைப்பில், இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த ஊடகச் சந்திப்பு, வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டதோடு, இதில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்குள், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள அனைத்துச் சந்திகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சமிக்ஞை விளக்குக் கட்டமைப்பைப் பொறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இடைஞ்சல்கள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற மாற்று வழிகளைக் கையாண்டு, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதான வீதிகளுக்கு அருகாமையில் மாற்று வீதிகளை நிர்மாணிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – புத்தளம் வீதியை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், சிலாபம் நகரம் மற்றும் அந்த வீதியின் ஒரு பகுதி மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைத் தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீர், மின்சாரம், டெலிகொம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போது, நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட வீதிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்காக இதுவரை காணப்பட்ட முறைமைக்குப் புறம்பாக, உரிய நிறுவனங்களுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை பேச்சுவார்த்தைகளை நடத்தி, புதிய உத்திகளைக் கையாளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக, வீதியின் இருபுறமும் இரண்டு மீற்றர் பகுதியொன்றை ஒதுக்கியவாறே வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில் இழுவைப் படகொன்று விபத்துக்குள்ளாகி, பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்த செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், 9 மாதங்களுக்குள் குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: