தை மாதத்தில் மட்டும் யாழ் மாவட்டத்தில் 128 முறைப்பாடுகள் – மது வரித்திணைக்களம்!
 Tuesday, February 7th, 2017
        
                    Tuesday, February 7th, 2017
            
யாழ் மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் மட்டும் சட்டவிரோத மது பாவனை தொடர்பில் 128 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டள்ளதாக மது வரித்திணைக்களத்தின் வடக்கு மாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் அதிகரித்துவரும் சட்டவிரோத மது மற்றும் போதைப் பாவனைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் சட்டவிரோத செயற்பாடுகளை இனம் கண்டு அவற்றிற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள 5 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் நடவடிக்கையில் கடந்த தை மாதத்தில் மாத்திரம் 128 முறைப்பாடுகள் நீதவான் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நீதிமன்றங்களினால் 101000 ருபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் யாழ் அலுவலகத்தில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 40000 ருபாய் தண்டமும், சாவகச்சேரி அலுவலகத்தில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 6000 ருபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
சங்கானை அலுவலகத்தில் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 6000 ருபாய் தண்டமும் மல்லாகம் அலுவலகத்தில் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 7000 ருபாய் தண்டமும் பருத்தித்துறை அலுவலகத்தில் 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 42000 ருபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி வரும் காலங்களிலும் சட்டவிரோத மது பாவனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன் அனுமதி இன்றி சுருட்டு பீடி தயாரித்தல், சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை செய்வது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த கடைகள் சோதிக்கப்பட்டு அவற்றிற்கெதிராய் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        