தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் – ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Sunday, June 26th, 2022

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய வலய நாடுகள் இலங்கையை நண்பராக கருதுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால திட்டங்கள் தொடர்பில், நிலையான தரவுகளூடாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு துரிதமாக ஒத்துழைப்புகளை வழங்க முடியும் எனவும் ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் 75 வீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதனூடாக பல பிரச்சினைகளுக்கும் உணவு விநியோகத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான விடயங்களை கருத்திற்கொண்டு, நீண்டகால தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் சட்டத்தை அமுல்படுத்தும் போது, எவ்வித பேதங்களும் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு, சுற்றுலாத்துறை, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இதன்போது மிக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: