தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை – 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய நடவடிக்கை!

Sunday, March 10th, 2024

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 160 பேரை வாக்காளர்கள் தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடியாக தெரிவு செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 99 வது ஷரத்திற்கு அமைய விகிதாரசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கு அதிகளவில் பணத்தை செலவிட நேரிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்கான வேட்பாளர்கள் சட்டவிரோதமான முறையிலும் நிதியை திரட்ட வேண்டியுள்ளது.

இதனால், தேர்தல் நிதியை வழங்கியவர்களின் சட்டவிரோத செயல்களுக்கும் உதவும் நிலைமைக்கு மக்கள் பிரதிநிதிகள் தள்ளப்படுகின்றனர்.

இதன் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை முன்வைத்துள்ள பெரும்பான்மையானவர்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேரை தொகுதிகள் ஊடாக தெரிவு செய்யும் முறைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில்,நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியல் சாசன மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்வது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் 160 பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடியாக தெரிவு செய்யவும் ஏனைய 65 பேரை விகிதாசார அடிப்படையில் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் தெரிவு செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: