தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை !

Wednesday, April 24th, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மே தினத்தை அடுத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் அது தொடர்பில் சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட தரப்பினரை மீண்டும் உள்வாங்குவதற்கு பிரதமரின் தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தமது தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: