தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு! தேர்தல் செலவு 2500 கோடியை தாண்டும் தேர்தல் ஆணைக்குழு!

Sunday, April 19th, 2020

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமே அன்றி, அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு செல்வது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தால், அதற்கு அமைய அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தற்போது நாடு நிர்வகிக்கப்படும் முறை சிறந்தது எனவும் தேர்தல் ஒன்று அவசியமில்லை எனவும் பலர் கூறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

யார் என்ன கூறினாலும் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது என்பதால், தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படும் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் நாளையுதினம் முக்கிய மாநாட்டை கூட்டவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலக அதிகாரிகளும் பொதுநிர்வாக சேவை உயரதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால் அதன் செலவினம் மூன்று மடங்காக அதிகரிக்குமென அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏற்கனவே பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 750 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால். இந்தத் தொகை 2,500 கோடி ரூபாயையும் தாண்டலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் பொதுத்தேர்தலை நடத்தும் காலத்துக்காக சுகாதார அதிகாரிகளிடம் இருந்து எழுத்துமூல ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் நேற்று இரவு ஜனாதிபதியின் அலுவலகம் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளின் ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: