தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வோம் – ஜனாதிபதி

Thursday, June 14th, 2018

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாத்து நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதலே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் 12ஆவது தடவையாக தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியபோது இதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு கைத்தொழிற்துறையினர் முகங்கொடுக்கும் 6 பிரதான பிரச்சினைகள் தொடர்பாகவும் பொருளாதார முகாமைத்துவத்தில் மேற்கொள்ள வேண்டிய துரித மாற்றங்கள் மற்றும் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடன்களை பெற்றுக்கொள்ள முடியாமையினால் அவர்களது தொழிலை முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் பொறுப்பு அனைத்து அரச வங்கிகளுக்கும் இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிக இலாபம் பெறுவதை மாத்திரம் கருத்திற் கொள்ளாது தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலமாக நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க அரச வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்
சுகாதார சேவைகளான மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவமனை கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வெட் வரியை நீக்குதல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், விரைவில் அது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணவும் முடிவெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: