தேசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பு!

Thursday, April 13th, 2017

இலங்கையில் தேசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் . பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜப்பான் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கத்திற்கு அடிப்படையான புதிய அரசியல் யாப்புக்கு  தமது நாட்டு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் ஜப்பான் பிரதமர இதன் போது  தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் வரலாற்று சிறப்புமிக்க தொடர்புகளை மேலும் வலுவூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயம் பெரிதும் உதவியுள்ளது.

இலங்கையின் துறைமுகம், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய தேசிய தரத்திலான அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

தீவு நாடுகளான ஜப்பானுக்கும் இலங்கைக்குமான சமுத்திர பாதுகாப்பு மற்றும் சுதந்திர கப்பல் போக்குவரத்து ஆகியன முக்கியமானதாகும். இதற்காக இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு முக்கியமானதென்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரும் ஜப்பானின் இயற்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான கருத்துக்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு விடயங்களை விரிவுபடுத்துவதற்கான விடயத்தில் தனியார் துறையினரின் பங்களிப்பும் இடம்பெறவேண்டும்.

திருகோணமலை துறைமுக முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்க ஜப்பான் ஒரு பில்லியன் யென்களை நிதியுதவியாக வழங்க முன்வந்தமையையிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.  தேசிய தொலைக்காட்சி டிஜிற்றல் மயப்படுத்துவதற்கான தேவையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts: