துபாயிலிருந்து நாடு திருப்பினார் ஜனாதிபதி – இலங்கையின் அர்ப்பணிப்பை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜோன் கெரிக்கு அழைப்பு!

Tuesday, December 5th, 2023

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்று (04) இரவு துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி காலநிலை நீதி மன்றத்திற்கான முன்மொழிவை முன்வைத்ததுடன், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளில் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதுடன், இலங்கையில் நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: