தீ அணைக்க முன் பணம் கேட்ட யாழ் மாநகரசபை – விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் மாநகர சபை ஆணையாளர்!!

Sunday, April 9th, 2023

யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

இந்நிலையில் இது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நேற்று சனிக்கிழமை யாழ். சுண்டுக்குளிப் பகுதியில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு யாழ். மாநகர சபைத் தீயணைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட நிலையில் பணம் கட்டினால் வர முடியும் என உத்தியோகத்தர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எழுந்த சர்ச்சையை தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து கட்டண அறவீடு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் முற்பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.

இவ்வாறான நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தவறான கருத்தை கூறியதாக எனக்கும் தகவல் கிடைத்தது

ஆகவே குறித்த உத்தியோகத்தர் பதிலளித்த விதம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் வறிதாகியுள்ள நிலையில் அரச அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படும் இன்றைய காலச் சூழலில் அநேக சபைகளில் இவ்வாறான துஸ்பிரயோகங்களும் அலட்சியப் போக்குகளும் அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெற்று வருவதாக சேவைகளுக்காக சென்றுவரும் பொதுமக்கள் கவலையுடன் சுட்டிக்காட்டிவருகின்ற நிலையில் யாழ் மாநகர சபையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதை மேலும் உறுதிசெய்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: