திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் – பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு!

Wednesday, September 13th, 2023

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலத்தை மீட்பதற்கு பொலிசார் விடுதிக்கு சென்ற வேளையில் சிறுமியின் பாட்டி அங்கிருந்த கட்டிலில் சுயநினைவின்றி மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.  குறித்த சிறுமியும் அவரின் பாட்டியும் திருகோணமலையை சேர்ந்தவர்களாவர்.

சிறுமிக்கு சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வைத்திய சிகிச்சையளிக்க வருகை தந்து விடுதியில் தங்கியிருந்ததாக விடுதியின் உரிமையாளர் தெரிவித்ததாக காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் அறையை வாடகைக்கு பெற்றதன் பின்னர் ஒரேயொரு தடவை மாத்திரமே அறையைவிட்டு வெளியேறியிருந்ததாக விடுதியின் உரிமையாளர் மேலும் அறிவித்ததாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் தங்கியிருந்த அறையிலிருந்து நீண்ட நேரமாக வெளியேறாமையினால் விடுதியின் சேவையாளர்கள் அறையின் கதவை தட்டி சமிஞ்ஞை செய்துள்ளனர்.

எனினும் எவ்வித பதிலும் கிடைக்காமையினால் யன்னல் வழியாக பார்த்தபோது சிறுமி உயிரிழந்திருந்தமையை விடுதியின் சேவையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதன்போது சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

சிறுமியின் பாட்டியை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் போது தம்மை எங்கு அழைத்துச்செல்கிறீர்கள் என வினவியதாகவும் பின்னர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 வயதுடைய நாகபூசனி சிவநாதன் என்பவரே குறித்த சிறுமியின் பாட்டியாவார். அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதில் தாங்கள் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் பாட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டமையினால் மேலதிக சாட்சியங்களை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

000

Related posts: