திருகோணமலையில் 24 மணி நேரத்தில் பதிவாகிய கொரோனா தொற்று எண்ணிக்கை!

Thursday, May 6th, 2021

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 85 புதிய கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

உப்புவெளி சுகாதார பிரிவில் 29 பேர், திருகோணமலை பிரிவில் 23 பேர், கந்தளாய் 8 பேர், மூதூர் 11 பேர் என புதிய தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 23 நபர்கள் பி.சி.ஆர் மூலமாகவும், 62 நபர்கள் அன்டிஜன் பரிசோதனை மூலமாகவும் கண்டறியப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் திருகோணமலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றவர்களே அண்டிஜன் பரிசோதனை மூலமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 15 மரணங்கள் கொரோனாவினால் பதிவாகியுள்ளன.  திருகோணமலை சுகாதார பிரிவில் 5 மரணங்கள், உப்புவெளி பிரிவில் 5, மூதூர் 2, கந்தளாய் 2, கிண்ணியா 01 என இவ்வாறு மரணச் சம்பவங்கள் கொரோனா மூலமாக ஏற்பட்ட இழப்பாகும். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 700 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில் மே மாதம் தற்போது வரை 205 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது கொவிட்19 சிகிச்சை நிலையங்களுக்கு இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது. எதிர்வரும் காலங்களில் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கோமரங்கடவெல வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதுடன் மூதூர் வைத்தியசாலையில் உள்ள 12 கட்டில்கள் தயார் நிலையில் இருந்து வருவதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இனி வரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்குமானால் சிகிச்சை நிலையங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

Related posts: