அடுத்த நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Thursday, July 29th, 2021

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவிலான மக்கள் குடிநீரின்றி பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பாரிய அளவிலான குடிநீர் திட்டமான ‘விஷல் மாத்தளை நீர்விநியோகத் திட்டத்தை’ ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்றையதினம் பிரதமர் உரையாற்றினார்.

இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் நான்கு வருடங்களில் 47 இலட்சம் குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியினை ஈடுபடுத்தி பல நீர் வழங்கல் திட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும். இவ்வாண்டு மாத்திரம் 2 இலட்சத்து 45 ஆயிரம் வீடுகளுக்கு புதிதாக நீர் விநியோகத்தை பெற்றுக்கொடுப்பதற்கு, 33 திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கு அமைச்சர் வாசுதேவ உள்ளிட்ட நீர் வழங்கல் அமைச்சு தயாராகவுள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டங்களில் பல இறுதி கட்டத்தில் காணப்படுகின்றன. இதனால் விரைவில் மேலும் திட்டங்களை மக்கள் மயப்படுத்த எம்மால் முடியும் என்று தாம் நாம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்கும் போது நாம் பல நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்திருந்தோம். உரிய நேரத்தில் அத்திட்டங்களை நிறைவு செய்திருந்தால் முழு நாட்டு மக்களுக்கும் இந்நேரத்திற்கு சுத்தமான குடிநீர் கிடைத்திருக்கும். நாம் ஆரம்பித்தமையால் சிலர் அதனை தாமதப்படுத்தினர். இன்றேல் இவை இதற்கு முன்னதாகவே மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கும்..

நீர் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட வளமாகும். அந்த வளமும் தற்போது மாசுபடுத்தப்பட்டு வருகிறது. அதனாலேயே மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

குழாய் மூலமான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பாரியளவு செலவிடுகிறது. இதனால் நீரை வீண்விரயமின்றி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இதன்போது பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நம் நாட்டில் உள்ள ஆறுகளும் மாசடைந்து வருகின்றன. சுரகிமு கங்கா திட்டத்தின் கீழ் அந்த ஆறுகளில் பதினேழு ஆறுகளை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும் நாங்கள் சமீபத்தில் திட்டங்களை ஆரம்பித்தோம்.

நாம் பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து பேசினாலும், இப்பாரிய திட்டங்களில் உள்ளடக்க முடியாத கிராம பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு சமூக நீர் வழங்கல் திட்டம் ஊடாக சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.

எனவே, உங்கள் கிராமத்திற்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே முடித்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த திட்டத்திற்கென மூவாயிரத்து 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 ஆண்டுகளில் 47 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும்.  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: