திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளதென கூறப்படுவது முற்றிலும் பொய்யானது – கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, September 21st, 2022திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
இதனால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பதில் சொல்வது, திரிபோஷ விநியோகத்தில் ஒழுங்குமுறைகள் இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பில் பிரச்சினை நிலவியது அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷவுக்கான தட்டுப்பாடு நிலவியது பின்னர் யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.
எவ்வாறாயினும், திரிபோஷவில் எஃப்ளொடொஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன்.
எந்தவித அடிப்படையும் இல்லாமல் இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயாராகவுள்ளேன்.
இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் அனுமதியை பெறுவது அவசியமாகும் என்றார்.
முன்பதாக
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு, எமது செய்திப் பிரிவு வினவிய போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


