அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, October 26th, 2021

அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை அமைச்சரவை அமைச்சின் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம், வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் நான்கு திட்டங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூன்று அரச நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டின் தேர்ச்சி தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு 55, ஆயிரத்து 452 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய குறித்த நிதியை இவ்வருட இறுதிக்குள் திட்டங்களுக்காக செலவிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில திட்டங்களை செயற்படுத்தும் போது அத்தியாவசிய ஆட்சேர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

ஊதியம் வழங்குவதற்கு அந்தந்த நிறுவனங்களுக்கு வருமானம் இருப்பின், பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தடையில்லை எனவும் தேவையானவர்களை வேலைக்கு அமர்த்துமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

MV எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பிலும் இந்த கூட்டத்தின்போது பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

கப்பல் விபத்தால் ஏற்படுட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிட்டு இழப்பீடு பெறுவதற்கு லண்டன் நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் மாதிரிகளையும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு உயிரியல் மாதிரிகளும் அனுப்பப்பட்டுள்ளமை அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் இரு பேராசிரியர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட 40 பேரை கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீர்ப்பாசன சுபீட்ச திட்டத்தின் கீழ் ஆறு மாவட்டங்களில் 65 குளங்களை அடையாளம் கண்டு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த 23 குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர். இவ்வாறு புனரமைக்கப்படும் குளங்களின் பெயர் பட்டியல் மற்றும் மேற்படி குளங்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன என்பன தொடர்பான அறிக்கையை தனக்கு வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: