யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு கடந்த வருடம் அதிக வாசகர்கள்!

Saturday, February 24th, 2018

யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு கடந்த வருடம் அதிகளவான வாசகர்கள் வருகை தந்துள்ளதாக நூலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி பொது நூலகத்தைத் தேடி வரும் வாசகர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புள்ளி விவரத்தில் மேலும் உள்ளதாவது:

யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் பத்துப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் வாசித்தல் பகுதி, கணினிப் பகுதி, நூல் இரவல் பகுதி, சிறுவர் பகுதி, இளைஞர் பகுதி போன்றவற்றில் வாசகர்கள் அதிக நாட்டம் காட்டுகின்றனர். 2016 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 894 வாசகர்களும், 2017 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 353 வாசகர்களும் வருகை தந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 257 பேர், 2017 ஆம் ஆண்டு 264 பேர் புத்தகம் இரவல் வழங்கும் பகுதிக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் கடந்த வருடத்தை விட படிப்படியாக வாசகர்கள் அதிகரிப்பதைக் காட்டுகின்றது.

பொது நூலகத்தின் கீழ் நல்லூர், நாவாந்துறை, நாச்சிமார் கோவிலடி, குருநகர், இந்து கலாசார நூலகம் உட்பட ஐந்து நூலகங்கள் உள்ளன. அதில் மொத்தமாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 922 புத்தகங்கள் உள்ளன. இவற்றில் பொது நூலகத்தில் மாத்திரம் 97 ஆயிரத்து 828 புத்தகங்கள் உள்ளன. கதைப் புத்தகம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்களை அதிகம் வாசிக்கின்றனர். கதைப் புத்தகங்களில் ரமணிச் சந்திரன், உமாசுதா, முத்து லக்சுமி, இராகவன் ஆகியோரது நூல்கள் அதிகம் வாசிக்கப்படுபவையாகவும் , இரவல் வாங்குவதாகவும் உள்ளன. நூலகத்தின் சிறப்புப் பிரிவாக இலங்கையில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலங்கை பற்றிய நூல்கள் உள்ள பிரிவு உள்ளது. இதில் 12 ஆயிரத்து 328 நூல்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 8 ஆயிரம் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு தேவையின் நிமித்தம் ஏனைய நூலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்றுள்ளது.

Related posts: