தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Sunday, April 12th, 2020

பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் கடந்த 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றமை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அத்துடன் நாடு சாதாரண நிலைமையை அடையும் வரையில் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து திடமான தினம் எதனையும் குறிப்பிட முடியாது எனவும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையில், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை சில மாவட்டங்களாக பிரித்து தனித்தனியே நடத்தி, ஒரே நாளில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செய்திகள்’ வெளியாகியுள்ளன.

தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அண்மையில் தனது செயலாளர் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல் 14 நாட்களுக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் 15வது தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என கூறியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களுக்குள் இருக்கும் அச்சத்தை போக்கி தேர்தலை நடத்த வேண்டிய சவாலை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.

மக்கள் அச்சத்துடன் இருந்தால், வாக்களிப்பு வீதம் குறைவடையவும் வாய்ப்புள்ளது. மறுபுறம் தேர்தல் நடத்தப்படுவது தாமதிக்கப்பட்டால், அந்த காலப்பகுதியில் கட்டாயம் ஏற்படக்கூடிய அரசியலமைப்பு நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நிச்சயம் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் சீனாவின் யுஹான் நகரம் மீண்டும வைபவ ரீதியாக திறக்கப்பட்டது போல், நாட்டில் சில மாவட்டங்களை இணைத்து கொரோனா வைரஸ் பரவலில் இருந்து விடுக்கவிக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து, கூடிய விரைவில் அந்த பிரதேசங்களில் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியின் பின்னர் படிப்படியாக நீக்கவும் ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கையை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்டிருந்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா, ஏப்ரல் 25 ஆம் திகதி சுபமான செய்தியை வெளியிட முடியும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: