தற்போதைய கொரோனா உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை!

Sunday, November 1st, 2020

நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது என  தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் அரசாங்கத்துக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் வேறுபட்டத் தன்மையைக் கொண்டுள்ளமையால், இதுதொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை தற்போது சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி மினுவங்கொட, பேலியகொட மற்றும் பேருவளை போன்ற கொத்தணிகளில் பரவியது ஒரு வகையான வைரஸ் என தெரியவந்துள்ளது. இலங்கையில் தற்போது இந்த ஒரு வகையைச் சேர்ந்த வைரஸின் தாக்கமே காணப்படுகிறது. எனினும், இந்த வைரஸ் வீரியம் கூடியது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரவும் வேகமும், உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது. முதலாவது அலையின்போது காணப்பட்ட வைரஸ் அல்ல இது. இதனை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அதேபோல், இந்த சவாலை முறியடிக்க, மக்களும் அரசாங்கத்துக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: