தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி – தகுதியானோர் பாதிப்பு – துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

Saturday, April 15th, 2023

அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நிதி அமைச்சின் அதிகாரிகள், கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரடியாகவும், நிகழ்நிலையாகவும் இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய நெல் கொள்வனவு செய்தல் மற்றும் பகிர்ந்தளிப்பதில் காணப்படும் பிரதான மூன்று சிக்கல்கள் இனங்காணப்பட்டன.

நெல் உற்பத்தி செய்யப்படாத மாவட்டங்களுக்கு அரிசி விநியோகம் செய்யும் போது ஏற்படும் தாமதம் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, நெல் உற்பத்தி செய்யப்படாத மாவட்டங்களிலுள்ள குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு முதற்கட்ட 10 கிலோகிராம் அரிசியை விரைவாகப் பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான திட்டத்தைத் தயாரிக்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், நெல் கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதில்லை என்றும் இதனால் விவசாயிகளுக்குரிய நன்மைகள் சரியாகச் சென்றடைவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்கமைய, நெல் கொள்வனவின் போது இடம்பெறும் முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் இதனால் விவசாயிகள் விவசாயம் செய்வதிலிருந்து விலகிச்செல்வதை தடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, பயனாளிகளின் தரவுகள் உரிய முறையில் பேணப்படாமை காரணமாக அரிசி விநியோகிக்கும் போது பொது மக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுப்பது குறித்து குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தேவையுடைய மற்றும் தகுதியானவர்களுக்கு நலன்கள் கிடைப்பதில்லை எனவும் தகுதியற்றவர்களும் அரிசியை பெற்றுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். மேலும், பொதுமக்களுக்கு நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, மாவட்ட கமத்தொழில் பணிப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் தரவுத்தளத்தை உருவாக்க முடியும் என குழு சுட்டிக்காட்டியது.

இதற்கு மேலதிகமாக, 2023 சிறு போகத்துக்கான உர விநியோகம், உரங்களின் விலைகளை கட்டுப்படுத்தல், இயற்கை உர உற்பத்தியாளர்களை பாதுகாத்தல், உள்நாட்டு விதைகள் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் விதைகளுக்கான விலைகளை நிர்ணயித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: