தமிழ் மக்கள் சந்தோசமான வாழ்வை மீண்டும் அனுபவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையே வழிவகை செய்யும் – வடக்கின் ஆளுநர் திருமதி சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, January 28th, 2021

தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த சந்தோசமான வாழ்க்கையினை மீண்டும் அனுபவிப்பதற்கு ஏற்றவகையில் தற்போதுதமிழ் மக்களுக்காக பேசக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையாக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ். நகரப்பகுதியில் திறந்து வைக்கப்பட்ட அரச மற்றும் தனியார் நெடுந்தூரப் பேருந்து சேவை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்காக குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி வருகின்றார்.

அதுமட்டுமல்லாது வடக்கு மாகாணத்தை மட்டுமன்றி கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்காகவும் அவர் சேவையாற்றி வருவதை நான் அரச அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் இருந்து அவதானித்துள்ளள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வடக்கு மாகாண மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு அங்கீகாரம் வளங்கிய நிலையில் அதனைப் பெறுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உறுதுணையாக நின்றார். வடக்கு மாகாணத்துக்கு இம்முறை 2021 வரவு செலவுத்திட்டத்தில் 1500 மில்லியன் ரூபாக்களை ஜனாதிபதி விசேடமாக ஒதுக்கித்தந்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தீர்வுகாணும் நோக்கில் கடந்த காலங்களில் இரணைமடு திட்டம் ஏற்படுத்தப்பட்ட போது அதனை சில அரசியல் வாதிகள் தடுத்திருந்தார்கள்.

ஆனாலும் யாழ். மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அதற்கு சாதகமான தீர்வை பெற்றுள்ளார். இதன் பயனாக  வடமராட்சி களப்பு நீர் திட்டத்தை விரைவு படுத்துமாறு அமைச்சர் சமல் ராஜபக்ச நிதியையும் ஒதுக்கியுள்ளார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும் அவர் அதிக கவனம் செலுத்திவருவதை நான் அவருடன் பேசும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவதானிக்க முடிந்தது. அந்தவகையில்  யாழ் மாநகரத்தின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக 7 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டமிடல்களை சமர்ப்பிப்பதற்காக கால நீட்டிப்பை பிரதமர் அதிகரித்து தந்துள்ளார்.

இதனிடையே ஒன்பது மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சந்தித்த போது மாகாணத்திலிருந்து முன்பிருந்த ஆட்சேர்ப்பு முறைக்கு முகாமைத்துவ நிறுவனத்தின் அனுமதியை இரத்துச் செய்து நேரடியாக ஆளுநர்கள் முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் தமிழ் மக்களுக்காக தற்போதைய அரசாங்கம் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு 70 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்கள் அனுபவித்த சந்தோசமான வாழ்க்கையினை கிடைப்பதற்கு அனுபவம் வாய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமை வழிவகை செய்யும் என்றும் அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயன் இராமநாதன் உள்ளிட்ட ஏனைய மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: