தமிழ் மக்களைக் கைவிட்டு கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கும் கூட்டமைப்பு! – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, October 16th, 2016

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க வாக்களிக்குமாறு கோரிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கின்றனர். இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச கட்சியின் வட்டார நிர்வாகிகளுடனான சந்திப்பு நேற்று 2016.10.15 பிற்பகல் 4.00 மணியளவில் கட்சியின் பிரதேச நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வலி.வடக்கு பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான  இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் தலைமையில் சுன்னாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் பல பகுதிகள் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

01

அதிலும் வலி.வடக்குப் பிரதேசத்தில் அதிகளவான கிராம சேவகர்கள் பிரிவுகள் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மீள்குடியேற்றம் மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் யார்? இன்றைய இந்த புதிய அரசில் அங்கம் வகிப்பவர்கள் யார்? ஜனாதிபதி சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். இவ்வாறு இந்த அரசு கூட்டாட்சி அரசாங்கமாக உள்ளது. ஒருமித்துச் செயற்படுவதாக நிகழ்வுகளில் காட்சியளிக்கின்றனர்.

புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கியவர்கள் நாமே! என உரிமையும் கொண்டாடுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது, இந்த மக்களின் நில விடுவிப்புத் தொடர்பில் இவர்கள் ஏன் மௌனம் சாதிக்கினறனர்? மயிலிட்டி மக்கள் கடற்தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க வாக்களிக்குமாறு தேர்தல் காலங்களில் முழங்கியவர்கள், இன்று கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.

02

மக்களின் சேவையாளர்கள் என்ற நாமத்தைப் பெற்றுக் கொண்ட நாம், தொடர்ந்தும் மக்கள் சேவையாற்ற, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமைப்பின் துரோகத்தனங்களை, சூழ்ச்சிகளை, கபடத்தனங்களை, வஞ்சகங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். 2016ல் அரசியல் தீர்வு நிச்சியம், வாக்களியுங்கள் என்றார்கள். இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன. இதுவரை தீர்வைச் சமர்ப்பித்தார்களா? கூட்டமைப்பினர் பதவிக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து சோரம் போயுள்ளதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வே.குகேந்திரன், கட்சியின் தெல்லிப்பளை பிரதேச நிர்வாக உதவிச் செயலாளர் சோதிலிங்கம் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts: