தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகமானவர்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு – நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி!

Thursday, January 3rd, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிக உறுப்பினர்கள் இரட்டைப் குடியுரிமை கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சில தரப்பினர் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் –

“இந்த விடயத்தை சட்டத்துக்கு முன்பாக கொண்டு சென்று அதனை நிரூபிக்கும் நடவடிக்கைகளை சபாநாயகரும் நாடாளுமன்ற செயற்குழுவும் முறையாக எடுக்கவில்லை.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை பெற முடியாது என்பதை நீதிமன்றத்திற்கு அறிவிக்க நீதிபதிகள் குழுவொன்று தயாராகவுள்ளது.

இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் விபரங்கள் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் உள்ளன.

அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் அதன் எண்களை பரிசோதித்து இதனை உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருக்கவில்லை என அந்த கட்சியினர் தெரிவித்துள்ளதுடன் எதிர்கட்சி தலைவர் அலுவலகம் தற்போது மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: