தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு – இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – ஐ.நா செயலாளர் நாயகம் உறுதி!

Monday, September 20th, 2021

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸிடம் தெரிவித்துள்ளார்

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த பெருமளவான இளைஞர்களை தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் விடுவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுதலை செய்யப்பட முடியாத ஏனையவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளதுடன் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நீண்ட காலமாக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐநா செயலாளர் நாயகம் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் ஜனநாயகத்தை வலுவான நிலைக்கு கொண்டுசெல்வதே தமது இலக்கு எனவும் போராட்டங்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையின் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையூடாக தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகவும் நெருங்கி செயற்பட தயாரெனவும் இலங்கையில் மீண்டும் ஒருமுறை பிரிவினைவாதம் ஏற்படாதென தம்மால் உறுதி வழங்க முடியும் எனவும் மத ரீதியிலான தீவிரவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையும் ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் ஐ.நா செயலாளர் நாயகத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற தாம், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கொவிட் தொற்று பாரிய இடையூறாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், காணிகளை மீள கையளித்தல் மற்றும் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவின் வழிநடத்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வட மாகாண சபைக்காக ஜனநாயக ரீதியிலான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தமை என்பன தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் சிறு பொருளாதாரத்தை கொண்ட இலங்கை, கொவிட் தொற்றுக்கு மத்தியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இதன்போது ஐநா செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக அழுத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்கு முன்னர் 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்

இனங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

அதேநேரம் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்து சமுத்திர வலயத்தில் இலங்கையின் பாரிய சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களை முன்னெடுத்துச் செல்லும் இலங்கையினால் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: