“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது –பிரபாகரனே நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, January 12th, 2024

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. அதுமட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு.” என்றும் நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும், சிங்களவர்கள் படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பரஸ்பரம் கேள்விக்கணைகளைத் தொடுத்து காரசாரமாகத் தர்க்கம் செய்த நிலையில் இறுதியில் நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூட்டமைப்பினரை  சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பதாக நீதி அமைச்சரால் நேற்றுமுன்தினம் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக்  சிறிதரன் எம்.பி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது அதனை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,

பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்த காரணத்தால்தான் நீங்களும் தப்பியுள்ளீர்கள். தேசிய  பாதுகாப்பை எக்காரணிகளுக்காகவும் பலவீனப்படுத்த முடியாது. இங்கு சிங்கள அரசு, தமிழ் அரசு என்பதொன்று கிடையாது. ஸ்ரீலங்கா அரசே நடைமுறையில் உள்ளது.

ஆகவே, முட்டாள்தனமான கருத்துக்களைக் கூற வேண்டாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விமோசனம்  கிடையாது. நீங்களே தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.” என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், திராவிட தமிழ்க் கட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் ஆரம்ப காலத்தில் வேறு நோக்கத்துடன் அரசியல் கட்சிகளை ஆரம்பித்தார்கள். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் இணக்கமாக வாழ்வதை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர் விரும்புவதில்லை. அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டுள்ளார்கள்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  “சிறிதரன் எம்.பி. 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூறினார். அப்போது நான் பிறக்கவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார்.

அக்காலப்பகுதியில் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்களத் தாய்மார்கள் படுகொலை தென்பகுதியில் எத்தனை குண்டு வெடிப்புக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் நீங்கள். தலதா மாளிகையைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இப்படி உங்களின் பல படுகொலைகளை எங்களினாலும் பட்டியலிட முடியும்.

இந்துத் தலைவர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் பிரபாகரன்  நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார். இராணுவத்தினர், எவரையும் படுகொலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்றம், நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் உள்ளிட்ட நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஐந்து சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி., நீதி அமைச்சரால் நேற்றுமுன்தினம் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் கடுமையாக அதனை விமர்சித்தார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: