தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளர் சாதி ரீதியாக செயற்பட்டு வருகின்றார் – சமூக மட்ட பிரஜைகளால் குற்றச்சாட்டு!

Wednesday, July 24th, 2019

நாம் சமூக ரீதியாக இன்றும் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரவெட்டிப்பிரதேச சபைத் தவிசாளர் சாதி ரீதியாக செயற்பட்டு வருகின்றார் என சமூக மட்ட பிரஜையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 9 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி ம.விஜயகலா தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பான திணைக்களம் சார்ந்த சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. துறைசார்ந்த விடயங்கள் ஆராயப்பட்ட சமயம் துன்னாலை வேம்படி – கிளான் வீதி புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி சமூக அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன் போது கருத்துத் தெரிவித்த சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதியான ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லத்துரை என்பவரால் குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அதில் கரவெட்டிப்பிரதேச சபைத் தவிசாளரான திரு.ஐங்கரன் வேம்படி கிளான் வீதி புனரமைப்பு தொடர்பாக பேசப்பட்டபோது நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதித்த போதும் தம்மை தாழ்த்தப்பட்ட சமூகம் என்ற காரணத்தாலும் சிறுபான்மை இனம் எனவும் தெரிவித்தும் மிகவும் கீழ்த்தனமான முறையில் தம்முடன் தர்க்கப்பட்டுக் கொண்டதாகவும் வீதி புனரமைப்புக்கு நிதி ஒதுக்க முடியாது என்றும் தம்மை ஏளனமாக நடத்திக் கொண்டதாகவும் இன்றும் சாதி ஒடுக்குமுறை தலைவிரித்தாடுவதாகவும் இவ்வாறான தலைவர்கள் எங்களுக்குத் தேவையா? என சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேம்படி கிளான் வீதியில் புனரமைக்கப்பட வேண்டிய 200 மீற்றர் தூரத்துக்கான நிதியை தான் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார்.

கரணவாய் மத்தி குளங்கரை வீதி 2016 ஆம் ஆண்டு புனரமைப்புப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டு   மூன்று வருடம் கடந்த நிலையிலும் இன்னும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இதற்கான தீர்வு எப்போது என கரவெட்டிப் பிரதேசசபை உறுப்பினர் திருமதி சந்திரமோகன் சங்கீதா ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரி அவர்கள் தம்முடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யப்படாமல் தேசியப்பட்டியல்; பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரடியாகவே செயற்பட்டதால் தம்மிடம் அது தொடர்பான எவ்வித ஆவணங்களும் இல்லை என சபையில் தெரிவித்தார்.

Related posts: