தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022

அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் கரிசனையாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண தமிழ்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச எந்தத் தடையும் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்குக்கு விஜயம் செய்த அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன –

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச அவர்களுக்கு உரிமையுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து பேச முடியும். அதற்கு எந்தத் தடையும் கிடையாது.

அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் அலி சப்ரியும் யாழ்ப்பாணம் சென்ற போது பேச்சு நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் உள்ளதை ஏற்கிறோம். ஜனாதிபதியும் அரசாங்கமும் இவற்றைப் பற்றி பேசித் தீர்க்க வேண்டுமென்பதில் வெளிப்படைப் போக்குடனுள்ளனர்.

அத்துடன் அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, தென்மாகாணத்தில் மாத்தறை மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்டு 04 நடமாடும் சேவைகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் இவ்வாண்டில் நடத்துவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. காணி, உத்தியோகபூர்வ ஆவணங்கள், சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கல், நீதி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டுவதற்கு இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 2022 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவைகள் வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சரவைக்கு அமைச்சர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: