தமிழகத்திலிருந்து 39 குடும்பங்கள் இலங்கைக்கு வருகை!

Friday, January 25th, 2019

யுத்தகாலத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற குடும்பங்களில் 39 குடும்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளன.

ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் அவர்கள் இலங்கைக்கு மீள்திரும்புவதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தங்களது சுயவிருப்பின் பேரில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 அகதிகள் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். அவர்களில் 34 ஆண்களும், 49 பெண்களும் உள்ளடங்குவர்.

அவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர் என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மீள்திரும்பும் அகதிகளுக்கு இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாவும், உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாவும், குடும்பம் ஒன்றிற்கு 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் நிதி ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.

அத்துடன், மீள்குடியேற்ற அமைச்சினால் குறித்த இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து 5,000 ரூபாவும், தற்காலிக கொட்டகைகளுக்காக 25,000 ரூபாவும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாவும், காணி சுத்திகரிப்பிற்காக 5,000 ரூபாவும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களின்போது அகதிகளாக நாடு திரும்புவோருக்கு சிறப்பு புள்ளிகள் வழங்கப்பட்டு முன்னுரிமையளிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு லட்சம் அகதிகள் இந்தியாவில் உள்ளதாகவும், அவர்களில் 65 ஆயிரம் பேர் அகதி முகாம்களிலும் 35 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியிலும் வசிப்பதாகவும் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Related posts: