ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் அதன் உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி சுட்டிக்காட்டு!

Friday, November 26th, 2021

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் இடையே இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பிரதிபலனாகவே, கலீட் கியாரி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அன்டோனியோ குட்ரெஸ் அவர்களின் வாழ்த்துகளை ஜனாதிபதிக்கு தெரிவித்த கலீட், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அத்துடன் சுற்றாடல் தொடர்பாக காட்டும் ஆர்வம் மற்றும் நோக்கு பற்றி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த உதவிப் பொதுச் செயலாளர், அபிவிருத்தியை இலக்கை அடைந்து கொள்வதில் இலங்கையின் ஆர்வத்தையும் பாராட்டினார்.

கடற்படையின் பங்களிப்புடன் கண்டல் தாவரக் கன்றுகள் ஒரு இலட்சத்தை நடுவதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களின் மூலம் காலநிலை இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதேநேரம் கொவிட்-19 தொற்றுக் காலத்தில், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்வதற்கும் ஏனைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொவெக்ஸ் வசதிகள் ஊடாக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் அப்பிரதேசங்கள் துரித வளர்ச்சி கண்டதாகவும், ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தருகின்ற அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்துச் செயற்படும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் தாம் டயஸ்போராவுக்கு விடுத்த அழைப்பையும் ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார். அதுபற்றி நல்லெண்ணத்துடன் செயற்படுவார்களென்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் உறவுகள் தொடர்பாக இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று இலங்கையில் காணப்படுகின்றது. நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார் என்றும் நீதியரசர் ஒரு தமிழராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு விசேட பதவிகளை வகிப்போர் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதாகவும் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு கல்வி அடிப்படையாக அமையும் என்பது இரு தரப்பினரதும் கருத்தாகும்.

தென்னாபிரிக்கா, இனவாதச் செயற்பாடுகளை ஒழித்துக்கட்டி முன்னோக்கிச் செல்வதற்காக பின்பற்றிய செயற்பாடுகளை ஆய்வு செய்து, அது தொடர்பாக கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களின் மூலம் செயற்படுத்த முடியுமான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி   தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: