தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு – மனுக்களை பரிசீலிக்க பிரதேச செயலருடன் இணைப்பாளர் ஆலோசனை!

Tuesday, March 5th, 2024

பூநகரி முட்கொம்பன் கிரமன் குளம் பகுதி விவசாயிகள் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட தமது காணிகளை மீண்டும் குள அபிவிருத்தியின் பேரால் மறுபங்கீடு செய்ய கமநல சேவை திணைக்களம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த கோரும் கலந்துரையாடல்  ஒன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் (04) நடைபெற்றுள்ளது

முன்பதாக கடந்த வாரம்  குறித்த முறைப்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இவற்றை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி  பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் தனது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கழுவின்  இணைப்பாளருக்கு விடுத்திருந்த அறிவுறுத்தலுக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது குளத்தை அண்டியுள்ள காணிகளுக்கு 1992 இல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த சுவீகரிப்பு திட்டத்தால் 80  க்கும் மேற்பட்ட  காணி உரிமையாளர்கள் தமக்கான காணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டனர்.

குறித்த மேட்டுக் காணிகளுக்காக கமநல சேவை திணைக்களத்தின் மானிய உரத்தையும் பெற்று சுமார் 30 ஆண்டுகளாக இந்த நிலங்களை நம்பி வாழும் எங்களை எந்த  முன்னறிவிப்பும் மாற்று ஏற்பாடுகளும் இன்றி எமது நிலங்களை விட்டு வெளியேற கோருவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு  பொருத்தமான மாற்று நடவடிக்கைக்கு விரைவில் செல்லவிருப்பதாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

இது தவிர பூநகரி அரசபுரம் பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய இடங்களில் சுவீகரிக்கப்பட்ட தமது காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரியும் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் பிரதேச செயலரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இந்நிலையில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை விடுவித்து உரியவர்களிடம் கையளிக்க தமக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் சந்திப்பில் கேட்டுக் கொண்டார்.

மேலும் இன்றைய சந்திப்பில் கரியாலை நாகபடுவானில் 6 ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடும்பம் தமக்கான காணி அனுமதிகோரி விண்ணப்பித்த கடிதத்துக்கு  காணி கச்சேரியின் ஊடாக அவருக்கு காணியை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: