தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020

அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 2ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நேற்று இரவு தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேவேளை எந்தவொரு காரணத்திற்காகவும் பழைய நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: