தனியார் பல்கலை மருத்துவ மாணவர்களை பயிற்றுவதற்குரிய அரச வைத்தியசாலைகளை கண்டறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழு நியமனம்!

Tuesday, March 14th, 2023

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கான குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை, லைசியம் கெம்பஸ் மற்றும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மருத்துவ மாணவர்களுக்காக போதனா வைத்தியசாலையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற அரச வைத்தியசாலைகள், ஆய்வு செய்தல், மீளாய்வு செய்தல், இனங்காணல் மற்றும் மருத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.

இதன்படி, இனங்காணப்படும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

அத்துடன் எட்டு வாரங்களுக்குள் இணங்கானல் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தகுழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: