தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கவனயீனம் – இளம் குடும்பஸ்தர் பரிதாப பலி!

Friday, August 28th, 2020

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண்மேடு சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு விசுவமடு சந்தியை இணைக்கும் வீதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலியாளே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பாலத்தின் கட்டுமான பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கொங்கிரீட் இடுவதற்காக குறித்த குடும்பஸ்தர் பணியில் ஈடுபடு்தப்பட்ட போது மண் சரிந்து விழுந்ததில் கம்பிக்குள் சிக்குண்டு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவத்தில் 1 ஆம் யூனிற் தர்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இராசலிங்கம் சசிதரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த  தொழிலாழி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், கட்டுமான பணிகளை முன்னெடுத்துவரும் தனியார் நிறுவனம் பொறுப்புடன் செயற்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

அத்துடன் குறித்த பகுதியில் பாலம் இடியும் தருவாயில் இருப்பதாகவும் அங்கு வேலைககு செல்ல வேண்டாம் எனவும் ஜே.சி.பி ஓட்டுனர் ஒருவர் எச்சரித்துள்ளார். எனினும் மேற்பார்வையாளர் குறித்த தொழிலாளியை வேலையை செய்யுமாறு பணித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உரியிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் இருதய நோய் தாக்கத்தில் உள்ளதாகவும், அவர்களின் குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நிலையில், குறித்த குடும்பஸ்தரின் இழப்பு பல்வேறு சவால்களை அக்குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பாதுகாப்பற்ற முறையில் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டமையாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உடன் பணி புரிபவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவ்வூர் மக்கள் அந்நிறுவனத்திற்கு முன்னால் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலை காணப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts: