தனியார் காப்புறுதி நிறுவனம் பாடசாலையில் ஆக்கிரமிப்பு – பெற்றோர் விசனம்!

Saturday, February 17th, 2018

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்கு தனியார் காப்புறுதி நிறுவனங்கள் தமது துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றன. அதில் பெற்றோர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் அலைபேசியினூடாக பெற்றோர்களுக்கு மூளைச்சலவை மேற்கொள்ளப்பட்டு காப்புறுதியில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை பிரபலமான காப்புறுதி நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் பெற்றோர் மேலும் தெரிவித்ததாவது –

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பப்பிரிவு மாணவர்களை இலக்கு வைத்து ஒரு விண்ணப்பப் படிவம் வகுப்பு ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பெற்றோரின் பெயர், முகவரி, அலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டையின் இலக்கம் என்பன சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து

அதிஸ்டசாலிகள் தெரிவு செய்யப்படுவர் எனவும் முதலாவது அதிஸ்டசாலிக்கு குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கும் இரண்டாவது அதிஸ்டசாலிக்கு பிரபல்யமான விருந்தினர் விடுதி ஒன்றில் இரண்டு நாள்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கும் கவர்ச்சிகரமான மேலும் பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன எனக் கூறி காப்புறுதி பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்பட்டு

வருகின்றது.  இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சுரஸ்சா காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை பாடசாலைகளுக்குச் சென்று வகுப்பு ஆசிரியர்களை முகவர்களாக நியமித்து அவர்களுடாக செயற்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஆசிரியர்களுடாக மேற்கொள்ளும்போது பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் அதனூடாக தமது திட்டங்களை செயற்படுத்த தனியார் காப்புறுதி நிறுவனங்கள் சில முயன்று வருகின்றன. இவ்வாறு அரச பாடசாலைகளில் ஆசிரியர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சட்டத்துக்கு முரணானதாகவே காணப்படுகின்றது.

பாடசாலையில் ஆசிரியர்களை வைத்து இவ்வாறு தனியார் நிறுவனம் மேற்கொள்வதாயின் பாடசாலை, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதேவேளை அரசாங்கத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச காப்புறுதியின் அனுகூலங்கள் தொடர்பான விடயங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கோ பெற்றோர்களுக்கோ தெரிவிக்கவில்லை.

இவ்வாறு தனியார் நிறுவனங்களின் காப்புறுதி திட்டங்களை ஊக்குவித்து வருவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது. இச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கல்வியிலாளர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related posts: