தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021

தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் தற்போதைய குறைந்தபட்ச வயதெல்லையை  அதிகரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, தனியார் துறையினரின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டது.

அதற்கமைய,  தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலமானது, பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில், கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வுபெறும் வயதை 60 வயது வரை நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களின் வயதுக்கேற்ப, மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: