தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை – 19 ஆம் திகதிமுதல் மண்ணெண்ணெயும் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, August 12th, 2022

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தை விநியோகித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பவற்றுக்காக சேகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள போலி செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

fuelpass.gov.lk இல் உள்ள பதிவுச் செயல்முறையின் மூலம் இணையவழியூடாக பொதுமக்களால் வழங்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தரவுகளும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் நிறுவப்பட்ட அமைப்பின் பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் நிர்வகிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வேறு எந்த நோக்கத்திற்காகவும், அமைச்சு அல்லது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் குறித்த தரவுகளைப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை முழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார் .

இதேவேளை முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் 40 ஆயிரம் மெட்றிக் டொன் அடங்கிய மசகு எண்ணெய் கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதோடு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 ஆம் திகதிமுதல் மண்ணெண்ணெய் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: