தடையின்றி மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபை சிரமங்களை எதிர்கொள்கிறது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022

நிலவும் வரட்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்சார சபை தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் மாதம்வரை நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் போது அது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.

அத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால், அமைச்சரவை ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அனைத்து உண்மைகளையும் பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவசர மின்சாரக் கொள்வனவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் மேலும் வீழ்ச்சியடைந் துள்ளதாக நீர் மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங் களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் சுமார் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்கின்றன.

காசல்ரீ நீர்த்தேக்க அணை 155 அடி உயரம் கொண்டதுடன் அதன் நீர் மட்டம் 118 அடியாகக் குறைந்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி காலை 6 மணியளவில் மவுசாக்கலை நீர்த்தேக்க அணையின் உயரம் 120 அடியாக இருப்பதுடன் நீர்மட்டம் 75 (15)அடியாகக் குறைந்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: