தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது – பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரிக்கை!

Monday, January 9th, 2023

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரித்துள்ளார்.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரேபிஸ் நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, மீதமுள்ளவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

நாய் கடித்தால் 95% தொற்று ஏற்படுகிறது. இலங்கையில் நாய்க்கடி தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணம் வெறிநோய்க்கு எதிரான நாய்களுக்கு தடுப்பூசி போடாததே ஆகும். சுமார் 7 மில்லியன் நாய்கள் உள்ளன, ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

எதிர்வரும் பெப்ரவரி வரை தடுப்பூசி இயக்கங்கள் பணிகளை மேற்கொள்ளும். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்தால் பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் நாய்களுக்கு ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டது மற்றும் 40,000 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது என்றும் நாய்க்கடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: