தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் !

Friday, January 29th, 2021

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதல் கட்ட கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசிகள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ராசெனிகா நிறுவனம் ஆகியன இணைந்து தயாரித்த கொவிசீல்ட் கொரோனா தடுப்பூசி மும்பாயில் உள்ள சீரம் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 500,000 தடுப்பூசிகளும் விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களிலும் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இந்த தடுப்பூசிகள் 2-8 இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கமும் 300,000 தடுப்பூசிகளை வழங்கவுள்ளது.

தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார.

Related posts: