கூட்டாட்சியே பொருத்தமானது என இதர தமிழ் கட்சிகள் வலியுறுத்துவது ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, April 10th, 2021

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி முறைமையே எமது நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என 33 வருடங்களுக்கு முன்னரே எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டி அதையே கட்சியின் கொள்கை நிலைப்பாடாகவும் வலியுறுத்திவரும் நிலையில், அந்த நிலைப்பாட்டை இன்று தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஏற்றுக்கொண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் குழுவிற்கு பரிந்துரை செய்திருக்கின்றமை வேடிக்கையாக உள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது ஆயுத போராட்ட மற்றும் ஜனநாயக அரசியல் செயற்பாட்டு அனுபவத்தை அடிப்படையாக வைத்து கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னரே எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமையை அடிப்படையாகக் கொண்டு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற அரசியல் இலக்கை நிர்ணயித்து எமது நாட்டுக்கு பொருந்தக்கூடிய எமது மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழக்கூடிய சூழலை கருத்தில் கொண்டு கூட்டாட்சி முறைமையில் பங்கேற்றிருந்தார்.

அவரது அந்த கூட்டாட்சி முறைமையை தூற்றி அவர் மேல் சேறு பூசிய தமிழ்த் தேசிய கட்சிகள் சமஸ்டி என்றால் கூட்டாட்சி என்றும் தற்போது கூட்டு சம்மேளன முறைமையிலான ஏற்பாட்டை உள்ளீர்த்துக் கொள்வதான யோசனையையும் கூறிவருகின்றனர்.

கூட்டு சம்மேளன அரசியல் அமைப்பு ஒன்றை வென்றெடுக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்துவதற்கு ஆணைக்குழுவின் நல்லெண்ணத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோளும் விடுத்துவருகின்றனர்.

அத்துடன் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பன்னாட்டு இராஜதந்திரிகள், தூதர்கள், தென்னிலங்கை இனவாத அடையாளங்கொண்ட சிங்கள கட்சிகளுக்கும் கூட்டாட்சி முறைமைதான் எமது நிலைப்பாடு என்பதை அழுத்தம் திருத்தமாக அடிக்கடி வலியுறுத்தி வருகின்றார்.

ஆனாலும் டக்ளஸ் தேவானந்தாவின் இத்தகைய தீர்க்கதரிசனம் மிக்க கருத்துக்களை இதர தமிழ் தரப்புகள் பேரினவாத சிங்கள அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி துணைபோவதாகவும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையிலிருந்து விலகி நிற்பதாகவும் பிரசாரப்படுத்தி வந்திருந்தனர்.

தமிழ் மக்களின் பல்லாயிரம் உயிர் உடமை அழிவுகளின் பின்னர் தமிழ் தேசியம் பேசிவரும் இதர தமிழ் கட்சிகள் இன்று கூட்டாட்சியை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் நிபுணர் குழுவிடம் கூட்டாட்சியே பொருத்தமானது என பரிந்துரை செய்தமை ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: